Member Area

Adirampattinam.com - A community portal for Adiraitees

Monday
Sep 06th
Home Articles
Articles


சிரிப்பு PDF Print E-mail
Sunday, 26 April 2009 18:57

"சிரிப்பு" என்பது சிநேகத்திற்கான முதல் தூது. இறுக்கமான சூழ்நிலையை இணக்கமாக்க உதவுவது. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பகிரங்க அடையாளமே சிரிப்பு. சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனித இனம் தான். ஆரோக்கியத்திற்கான பல்வேறு சுவைகளில் "நகைச்சுவை"யும் ஒன்று. "நிச்சயமாக அவனே (மனிதனை) சிரிக்க வைக்கிறான்". (அல்-குர்ஆன் 53:43).

நோய் நிவாரணி
சிரித்து மகிழ்வோடு இருப்பதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது என்பது ஜப்பான் பல்கலைக்கழக சமீபத்திய ஆய்வு. மேலும் இது இரத்த அழுத்தத்தை குறைத்து நரம்பு மண்டலத்திற்கு புத்துயிர் அளித்து தசை பிடிப்புகளை தளர்த்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் இருதயத்தையும் பலப்படுத்துகிறது என்பது நிபுணர்களின் கூற்று.

சிரிப்பும் அதற்கான வாய்ப்பும்
ஒரு மனிதன் தனியாக இருப்பதை விட பலருடன் கலந்து இருக்கும் போது வாய் விட்டு சிரிப்பதற்கு முப்பது மடங்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு குழந்தை ஒரு நாளில் சராசரியாக 300 முறை சிரிக்கிறதாம். (இனி மேல் வாழ்வில் சிரிக்கவே முடியாது என்பதனாலோ என்னவோ?) வளர்ந்த மனிதனும் கூட ஒரு நாளில் சராசரியாக 17 முறை சிரிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நகைப்பென்னும் உடற்பயிற்சி
100 முறை சிரித்தால் அது 15 நிமிடங்கள் வேகமாக சைக்கிள் ஓட்டுவதற்கு சமம் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். (நன்றி: தினமணிக்கதிர் 20.7.2003).

புண்படுத்துவதும் பண்படுத்துவதும்
பிறரைப் புண்படுத்திச் சிரித்து மகிழும் போக்கை (Caustic Humour) இஸ்லாம் முழுமையாக தடை செய்யும் அதே நேரம் எவர் மனதையும் நோகடிக்காத பண்பான ஆரோக்கியமான நகைச்சுவையை (Compassionate Humour) இஸ்லாம் வரவேற்கிறது.

 

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் ஏறிச்செல்ல ஒரு வாகனம் கேட்டார். அதற்கு நபியவர்கள் உம்மை ஒட்டகத்தின் குட்டியின் மீது ஏற்றிவிடுகிறேன் என்றார்கள். அதற்கு அம்மனிதர் இறைதூதர் அவர்களே! ஒட்டகக்குட்டியை வைத்து நான் என்ன செய்வது? என்று கேட்டதற்க்கு எந்த ஒட்டகமும் தாய் ஒட்டகத்தின் குட்டித்தானே என்றார்கள் (புன்னகை பூக்க).

அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: அபூதாவூத், திர்மிதி).

மார்க்கம் தரும் வரப்பிரசாதம்
உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் நீ சந்திப்பதும் தர்மமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி), ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (திர்மிதி 2022, 2037).

 

இவ்வாறு கூறும் உன்னத மார்க்கம் உலகில் இஸ்லாத்தை தவிர வேறெதுவும் இல்லை.

கண்ணியப் பார்வை
சிரிக்க காசு கேட்கும் சிடுமூஞ்சியாகவும் இல்லாமல், எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் இளிச்சவாயனாகவும் இல்லாமல் நடுநிலையோடு சிரிப்பதையே (புன்னகை) மார்க்கம் வலியுறுத்துகிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு போதும் ஒரேயடியாக தமது உள் நாக்குத் தெரியும் அளவுக்கு சிரிக்க நான் கண்டதில்லை. அவர்கள் (பெரும்பாலும்) புன்னகை புரிபவர்களாகவே இருந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி


புன்னகையாய் எதிர்கொள்ளல்
பிரச்சனைகளை ஏன் போர்க்களத்தை கூட புன் சிரிப்புடன் தான் எதிர்கொள்வார்கள் நபி (ஸல்) அவர்கள் (ஆதாரம்: புகாரி)

அறிஞர்கள் தரப்புச் சிரிப்பு
அழகின் சிரிப்பு என்றான் பாரதிதாசன்.
துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... என்றான் வள்ளுவநேசன்.
சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே... என்றான் கண்ணதாசன்.
சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவா மனித ஜாதி... என்றான் பொதுவுடைமை கவிஞன்.
வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போச்சு... என்றான் தமிழ் மூதறிஞன்.

இறைவனின் சிரிப்பு
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: அல்லாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்து சிரிக்கிறான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிடுகின்றார். இருவருமே சொர்க்கத்தில் நுழைகின்றார்கள் (எப்படி) முதலாமவர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு கொல்லப்படுகின்றார். பிறகு (அவரைக்) கொன்றவர் பாவமன்னிப்புக் கோர அதை ஏற்று அவரை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். பிறகு அவரும் அறப்போரில் (கொல்லப்பட்டு) உயிர் தியாகியாகி விடுகின்றார். (ஆதாரம்: புகாரி எண் 2826).

உஹது போரில் ஸயீத் பின் ஆஸ் (ரலி) அவர்களின் மகன் அஃபான் என்பார் எதிரிகளின் அணியில் இருந்தார். போரில் நுஃபான் பின் கவ்கல் (ரலி) என்ற முஸ்லிமை அவர் கொலை செய்து விட்டார். இவர் பிறகு இஸ்லாத்தில் இணைந்தார். பின்பு அறப்போரில் கொல்லப்பட்டு உயிர்த் தியாகியாகி விட்டார்.

 
வியாபாரக் கொடுக்கல், வாங்கலிலும் உரிமை கோருவதிலும் உரிமை வழங்குவதிலும் நலினத்தைக் கடைபிடிக்க வேண்டும் PDF Print E-mail
Thursday, 23 April 2009 14:31
வியாபாரக் கொடுக்கல், வாங்கலிலும் உரிமை கோருவதிலும் உரிமை வழங்குவதிலும் நலினத்தைக் கடைபிடிக்க வேண்டும்
 
( . . . أَدْخَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ الْجَنَّةَ رَجُلًا كَانَ سَهْلًا مُشْتَرِيًا وَبَائِعًا وَقَاضِيًا وَمُقْتَضِيًا )
 
விற்கும் போதும், வாங்கும் போதும், உரிமையைக் கேட்கும் போதும், உரிமையை வழங்கும் போதும் நலினத்தைக் கடைபிடித்தவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்துவிட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : உஸ்மான் -ரலி, நூற்கள் : அஹ்மத் 387, நஸாயீ, இப்னுமாஜா)
 
( دَخَلَ رَجُلٌ الْجَنَّةَ بِسَمَاحَتِهِ قَاضِيًا وَمُتَقَاضِيًا )
 
உரிமையை கேட்கும் போதும், உரிமையை வழங்கும் போதும் நலினத்தைக் கடைபிடித்தவன் சொர்க்கத்தில் நுழைந்து விட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் -ரலி, நூல் : அஹ்மத் 6669)
 
 
( رَحِمَ اللَّهُ رَجُلًا سَمْحًا إِذَا بَاعَ وَإِذَا اشْتَرَى وَإِذَا اقْتَضَى )
 
விற்கும் போதும், வாங்கும் போதும், உரிமையைக் கேட்கும் போதும் நலினத்தைக் கடைபிடிப்பவனுக்கு அல்லாஹ் கிருபை செய்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் -ரலி, நூல் : புகாரீ 1934)
 
 
 
 
அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறும் வார்த்தையைக் கூற வேண்டும்
 
( إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللَّهِ لَا يُلْقِي لَهَا بَالًا يَرْفَعُهُ اللَّهُ بِهَا دَرَجَاتٍ وَإِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ سَخَطِ اللَّهِ لَا يُلْقِي لَهَا بَالًا يَهْوِي بِهَا فِي جَهَنَّمَ )
 
ஒரு அடியான் அல்லாஹ்வுக்குப் பிரியமான ஒரு வார்த்தையை -அதன் பயனை அறியாமல்- எதார்த்தமாக கூறுகிறான். ஆனால் அல்லாஹ் அதன் மூலம் அவனுக்கு பல அந்தஸ்துகளை உயர்த்துகிறான். ஒரு அடியான் அல்லாஹ் வெறுக்கக் கூடிய ஒரு வார்த்தையை -அதன் விளைவு தெரியாமல்- எதார்த்தமாகக் கூறுகிறான். ஆனால் அல்லாஹ் அதன் காரணத்தால் அவனை நரகத்தில் வீசிவிடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : புகாரீ 5997)
 
நாணமுடையவர் PDF Print E-mail
Tuesday, 21 April 2009 00:28
வெட்கம் என்ற பண்பில் முன்மாதிரியான நபி (ஸல்) அவர்களையே உண்மை முஸ்லிம் பின்பற்றுவார். அபூஸயீதுல் குத்ரிய்யி (ரழி) கூறினார்கள்: "நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணைவிடவும் அதிக வெட்கமுடையவர்களாக இருந்தார்கள். அவர்களுக்குப் பிடிக்காத எதேனும் ஒரு காரியத்தைக் கண்டால் அதை அவர்களது முகத்தில் நாம் தெரிந்து கொள்வோம்.'' (ஸஹீஹுல் புகாரி)

வெட்கமென்பது மனிதனை இழிவான செயல்களிலிருந்தும் கடமைகளில் குறைவு செய்வதிலிருந்தும் தடுக்கும் உயரிய பண்பாகும். வெட்கம், மனிதனுக்கும் அவன் வாழும் சமூகத்திற்கும் நன்மையையே ஏற்படுத்தும். அதனால்தான் வெட்கத்தைப் பற்றி பல நபிமொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நபி (ஸல்) அவர்கள் அருளியதாக இம்ரான் இப்னு ஹுஸைன் (ரழி) அறிவிக்கிறார்கள்: "வெட்கம் நன்மையைத்தான் தரும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஸஹீஹ் முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளது: "வெட்கம் முற்றிலும் நன்மையே'' அல்லது "வெட்கம் முழுமையும் நன்மையே'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "ஈமான் எழுபதுக்கும் மேற்பட்ட அல்லது அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாகும். அதில் சிறப்பானது "லாஇலாஹ இல்லல்லாஹ்' என்ற கலிமாவாகும். அதில் தாழ்ந்தது பாதையில் இடையூறு தருபவற்றை அகற்றுவதாகும். வெட்கம் ஈமானின் ஒரு பகுதியாகும்.'' (ஸஹீஹுல் புகாரி)

முஸ்லிம் வெட்க உணர்வுடையவர். மக்களை சிரமப்படுத்தும் அருவருப்பான எந்தச் செயலும் அவரிடம் காணப்படாது. பிறரின் எந்தவொரு உரிமையிலும் குறைவு செய்யமாட்டார். ஏனெனில், வெட்கம் இவ்வாறான செயல்களுக்குத் திரையாகிறது. அவர் அல்லாஹ்வுக்காகவே வெட்கம் கொள்கிறார். தனது ஈமானில் அநீதி கலந்துவிடக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருப்பார்.

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்ளத் தூண்டும் இப்பண்புகள் ஏனைய மனிதர்களிடமிருந்து முஸ்லிமை பிரித்துக் காட்டுகிறது. இந்த வெட்கமே எல்லாக் காலங்களிலும், எல்லா சூழ்நிலையிலும் முஸ்லிமிடம் ஆழப்பதிந்திருக்கும். தனது செயல்களின் வெளிரங்கத்தைப் பார்த்து மனிதர்கள் விமர்சனம் செய்வார்கள் என்பதைவிட, தனது ரகசியங்களை அல்லாஹ் முற்றிலும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வால் ஏற்படுவதே முஸ்லிமின் வெட்கம். இதுவே முஸ்லிம்களின் பண்புகளுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களின் பண்புகளுக்குமிடைய உள்ள வித்தியாசமாகும்.

மென்மையானவர்
உண்மை முஸ்லிம், மனிதர்களிடம் மென்மையாக, நிதானமாக, நளினமாக நடந்து கொள்வார். அவரது மென்மை நேசிக்கப்படும்; அவரது நளினம் போற்றப்படும்; அவரது நிதானம் புகழப்படும். ஏனெனில், இவை புகழத்தக்க நற்பண்புகளாகும். அதன்மூலம் மனிதர்களை நெருங்கி அவர்களது நேசத்திற்குரியவராகத் திகழ முடியும். அல்லாஹ் தனது அடியார்களான முஃமின்களிடம் அப்பண்புகளை விரும்புகிறான்.

நன்மையும் தீமையும் சமமாகி விடாது. ஆதலால் தீமையை நீர் நன்மையைக்கொண்டே தடுத்துக்கொள்ளும். அவ்வாறாயின் உம்முடைய கொடிய விரோதியை அதே சமயத்தில் உம்முடைய மெய்யான, மிக்க நெருங்கிய சிநேகிதனைப் போல் காண்பீர். பொறுமையுடையோர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடைய மாட்டார்கள். அன்றி பெரும்பாக்கியம் உடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடையமாட்டார்கள். (அல்குர்அன் 41:34,35)

மென்மையை வலியுறுத்தும் சான்றுகள், முஸ்லிமின் சமுதாய வாழ்வில் பிரதிபலிக்க வேண்டிய உயரிய பண்பு என்பதை உறுதிப் படுத்துகிறது. நளினம் என்பது அல்லாஹ்வின் உயரிய பண்புகளில் ஒன்றாகும். அது தனது அடியார்களிடம் பிரதிபலிப்பதை அல்லாஹ் விரும்புகிறான்.

நபி (ஸல்) கூறினார்கள்: "அல்லாஹ் மென்மையானவன். அனைத்து விஷயங்களிலும் மென்மையையே நேசிக்கிறான்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நளினம் மிகவும் உயரிய பண்பாகும். வேறெந்த பண்புக்கும் அளிக்காத நற்கூலியை அல்லாஹ் அதற்கு வழங்குகிறான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மென்மையானவன். மென்மையையே நேசிக்கிறான். கடினத் தன்மைக்கும், வேறெந்த பண்புகளுக்கும் அளிக்காத நற்கூலியை மென்மைக்கு அளிக்கிறான். (ஸஹீஹ் முஸ்லிம்)

மென்மை அனைத்துக் காரியங்களையும் அலங்கரிக்கக் கூடியது, அதை அனைத்து இதயங்களும் நேசிக்கும். மென்மை அகற்றப்பட்டால் வெறுப்பு ஏற்பட்டுவிடும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மென்மை ஒரு விஷயத்திலிருந்தால் அதை அலங்கரிக்கவே செய்யும். மென்மை எந்த விஷயத்தில் அகற்றப்பட்டுள்ளதோ அதைக் கோரப்படுத்திவிடும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

பிறமனிதர்களுடன் பழகும்போது மென்மையை கைக்கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் போதித்தார்கள். அடியார்களிடம் மென்மையை வெளிப்படுத்தும் கிருபையாளனான அல்லாஹ்வின் மார்க்கத்தின்பால் அழைக்கும் முஸ்லிம், மனிதர்களிடம் மலர்ந்த முகத்துடனும் மென்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலைகள் எவ்வளவுதான் கோபத்தைத் தூண்டுவதாக இருந்தாலும் மென்மையை விட்டுவிடக்கூடாது.

அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ஒரு கிராமவாசி மஸ்ஜிது (நபவி)க்குள் சிறுநீர் கழித்துவிட்டார் அவரைத் தடுப்பதற்கு மக்கள் ஆவேசமடைந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரை விட்டுவிடுங்கள்! அவரது சிறுநீர் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி விடுங்கள். நீங்கள் இலகுபடுத்தவே அனுப்பப்பட்டீர்கள். சிரமப்படுத்த அனுப்பப்படவில்லை'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

மென்மையும், நளினமும், பெருந்தன்மையும் மூடிக்கிடக்கும் இதயங்களைத் திறக்கும் திறவுகோல்களாகும். முரட்டுத்தனத்தாலும், சிரமப்படுத்துவதாலும், மிரட்டுவதாலும் எதனையும் சாதித்துவிட முடியாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நற்செய்தி கூறுங்கள்! வெறுப்படைய செய்யாதீர்கள், எளிதாக நடந்து கொள்ளுங்கள், சிரமப்படுத்தாதீர்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மென்மையையும், நளினத்தையும், முகமலர்ச்சியையும் மக்கள் நேசிப்பார்கள். கடுமையையும், முரட்டுத்தனத்தையும் மக்கள் வெறுப்பார்கள் என்பதுதான் நபி (ஸல்) அவர்களின் இக்கூற்றுக்குக் காரணமாகும்.

.... கடுகடுப்பானவராகவும் கடின உள்ளம் கொண்டவராகவும் நீர் இருந்திருப்பீரானால் உம்மிடமிருந்து அவர்கள் வெருண்டோடியிருப்பார்கள்... (அல்குர்அன் 3:159)

இது ஒரு நிரந்தர உபதேசமாகும். உறுதி செய்யப்பட்ட நிலையான வழிமுறையாகும். நேர்வழியின்பால் மனிதர்களை அழைப்பதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொரு அழைப்பாளருக்குமான அவசியப் பண்பாகும். அப்பண்பின் மூலம் அவர்களது இதயங்களை வெல்ல முடியும். அம்மனிதர்கள் அழிச்சாட்டியம் செய்யும் வம்பர்களாக இருப்பினும் அவர்களிடமும் மென்மையான அணுகுமுறையையே மேற்கொள்ள வேண்டும்.

இக்கருத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவர்களது சகோதரர் ஹாரூன் (அலை) அவர்களையும் ஃபிர்அவ்னிடம் அனுப்பிவைத்தபோது கூறினான்.

"நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். நிச்சயமாக அவன் மிக்க வரம்பு கடந்துவிட்டான். நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அவன் பயந்து நல்லுணர்ச்சி பெறலாம்'' என்றும் கூறினோம். (அல்குர்அன் 20:43,44)

`இம்மார்க்கத்தின் வழிகாட்டுதலில் மென்மை என்பது நன்மையின் சங்கமமாகும். எவர் அதனை அருளப்பட்டாரோ அவர் நன்மை அனைத்தையும் அருளப்பட்டவராவார்; அதனை அருளப்பெறாதவர் நன்மையிலிருந்து அகற்றப்பட்டவராவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "எவர் மென்மையை இழந்தாரோ அவர் நன்மையை இழந்தார்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

தனி மனிதர், குடும்பம், மற்றும் சமுதாயம் இந்த மென்மையை கடைபிடிக்கும்போது நன்மை அவர்களை சூழ்ந்து கொள்ளும். இத்தன்மை கொண்டவர்கள் மக்களில் தனித்தன்மை வாய்ந்தவர்களாக காட்சியளிப்பார்கள்.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஆயிஷாவே! மென்மையாக நடந்துகொள். அல்லாஹ் ஒரு குடும்பத்தினருக்கு நன்மையை நாடினால் அவர்களுக்கு மென்மையின்பால் வழிகாட்டுகிறான்.'' மற்றோர் அறிவிப்பில்: "ஒரு குடும்பத்தினருக்கு அல்லாஹ் நன்மையை நாடினால் அவர்களிடம் மென்மையைப் புகுத்துகிறான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

ஜாபிர் (ரழி) அறிவிக்கிறார்கள்: "ஒரு சமுதாயத்தின் மீது அல்லாஹ் நன்மையை நாடினால் அவர்களிடம் மென்மையைப் புகுத்துகிறான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்னதுல் பஸ்ஸார்)

மனிதனிடம் அமைய வேண்டிய பண்புகளில் நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கும் தன்மையுடைய பண்பைவிட வேறெந்த பண்பு மகத்தானது?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நரகத்திற்கு ஹராமாக்கப்பட்ட ஒருவரைப் பற்றி அல்லது எவர் மீது நரகம் ஹராமாக்கப்படுமோ அவரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மக்களை நெருங்கியிருக்கும் மென்மையான, இலகுவான, நளினமான ஒவ்வொருவர் மீதும் நரகம் ஹராமாக்கப்படும்.'' (ஸுனனுத் திர்மிதி)

மனிதனுக்கு நற்பண்புகளை வழிகாட்டும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகள், அறுக்கப்படும் மிருகங்களிடம் கூட மென்மையாக நடக்க வேண்டுமென வலியுறுத்துகிறது. இறையச்சமுள்ள நல்லோர்கள் அடையப் போகும் "அல் இஹ்ஸான்' என்ற உயர்ந்த தன்மையில் இந்த மென்மையை இஸ்லாம் குறிப்பிடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் எல்லா விஷயங்களிலும் உபகாரத்தை விதித்திருக்கிறான். நீங்கள் கொலைத் தண்டனையை நிறைவேற்றினால் அழகிய முறையில் நிறைவேற்றுங்கள். பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுத்துக் கொள்ளுங்கள். உங்களில் ஒருவர் கத்தியை நன்கு தீட்டிக் கொள்ளட்டும். அதனால் பிராணிகளுக்கு (சிரமத்தை) இலேசாக்குங்கள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

அறுக்கப்படும் பிராணியிடம் மென்மையாக நடந்துகொள்வது அறுப்பவரின் உள்ளத்திலுள்ள மென்மையைக் காட்டுகிறது. மிருகங்களிடமும் மென்மையாக நடந்துகொள்பவர் மனிதர்களிடம் மிக மென்மையாகவும் மிருதுவாகவும் நடந்துகொள்வார் என்பதில் சந்தேகமில்லை. இத்தொலை நோக்குடன்தான் மிருகங்களிடம்கூட மிருதுவாக நடக்க வேண்டுமென இஸ்லாம் வழிகாட்டுகிறது.
 
கொரில்லா (Gorilla) PDF Print E-mail
Monday, 20 April 2009 02:58

கொரில்லா (Gorilla)

 

மனிதனின் செயல்பாடுகள் மற்றும் தோற்றத்தில் அவனைப் போலவே ஒத்த பல பண்புகளைக் கொண்ட கொரில்லாக்களைப் பற்றிய விபரங்களை இக்கட்டுரையில் பார்ப்போம்.

 

பலவிதமான சர்சைகளுக்கும், விவாதங்களுக்கும் ஆத்திக மற்றும் நாத்திக மக்களுக்கிடையே மட்டுமல்லாமல் விஞ்ஞானிகளுக்கிடையேயும் மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்திய இந்த உயிரினத்தைப் பற்றிய டார்வினின் கருத்து 19 மற்றும் 20ம் நூற்றாண்டின் மிகப்பெரிய அளவிலான ஆராய்ச்சிக்கு வித்திட்டதாகும். இதைப் போன்று அறிவியல் உலகில் புயலைக் கிளப்பிய வேறு ஒரு உயிரினம் எதுவும் இல்லை என்று நம்மால் திட்டவட்டமாக சொல்ல இயலும். இத்தகைய வாலில்லாத குரங்கு வகையைச் சேர்ந்த கொரில்லாக்களைப் பற்றிய விபரங்களையும் விரிவான தகவல்களையும் இவற்றின் மூலம் பரிணாம வளர்ச்சி ஏற்றபட்டிருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்பதைப் பற்றிய நம்முடைய சொந்த அபிப்ராயங்களையும் பார்ப்போம். இந்த கொரில்லா எந்த விஷயத்தில் மற்றவற்றை விட வேறுபட்டு விளங்குகின்றது என்பதற்கு நமக்கு நிறைய எடுத்துக்காட்டுகளின் அவசியம் தேவை இல்லை. மனிதனைப் போன்று தோற்றத்தில் இருக்கும் ஒரே விலங்கினம் இத்தகைய கொரில்லாக்கள் என்ற ஒரு விஷயம் நம் தொடரின் நோக்கத்தை நிறைவு செய்யப் போதுமானதாகும்.


பொதுவாக அறிவியல் அறிஞர்கள் எந்த ஒரு உயிரினமாக இருந்தாலும் அவற்றின் சில பண்புகளை அடிப்படையாக வைத்து ஒரு பட்டியலின் கீழ் வகைப்படுத்துகின்றனர். அதுபோல் மனிதன் உட்பட 235 பாலூட்டி இனங்களை பிரிமேட் (
Primate) எனும் பிரிவின் கீழ் கொண்டு வருகின்றனர். இவற்றில் முதன்மையான பண்பாக மனிதனைப் போன்று தட்டையான அகன்ற முகமும் நேராகப் பார்க்கக் கூடிய கண் அமைப்பும், மற்ற விலங்குகளைக் காட்டிலும் நன்கு வளைந்து கொடுக்கக் கூடிய வகையில் அமைந்த கை, கால், விரல்கள் அமைப்பையும் கொண்டுள்ளதால் இந்த பிரிவின் கீழ் விஞ்ஞானிகள் கொண்டு வருகின்றனர். இவற்றில் 30 கிராம் எடையுடைய லெமூர்(Mouse Lemur) முதல் அதைப் போன்று ஏறக்குறைய 6000 மடங்கு எடையுடைய கொரில்லாக்கள் வரை அதில் அடக்கம். அதில் மிக அதிக எடையுடைய கொரில்லக்களைப் பற்றிதான் நாம் பார்க்க இருக்கின்றோம்.

 


ஆண்டாண்டுக் காலமாக கொரில்லாக்கள் ஆபத்தான பயங்கரமான உயிரினமாகத்தான் மக்கள் மத்தியிலே உருவகப்படுத்தப்பட்டு வந்தன. எந்த விஷயத்தில் ஒரு தெளிவு இல்லையோ அதில் தங்கள் கற்பனைக் குதிரையை தட்டி முடுக்கிவிடுவதென்பது மனித இயல்பாகத்தானே இருந்து வருகிறது.


1933ம் ஆண்டு வெளிவந்த கிங் காங்
(King kong) படம் முதற் கொண்டு 1976ம் ஆண்டு வெளிவந்த கிங் காங் படம் வரை இவை அச்சத்தை எற்படுத்தும் பாத்திரங்களாகத்தான் மக்கள் மத்தியிலே விளம்பரப்படுத்தப்பட்டது. அவற்றின் தோற்றம் அத்தகைய அச்ச எண்ணத்தை தோற்றிவிப்பதாக இருப்பினும் கூட உண்மையில் கொரில்லாக்கள் மிக மிக சாதுவான பிராணிகளாகும். இதைப் பற்றிய மக்களின் கற்பனைகள் உண்மைக்கு மாற்றமாக மடையுடைந்த வெள்ளமாய் பாய்ந்து சென்றதற்குக் காரணம் அவற்றைப் பற்றிய உண்மையான தெளிவு இல்லாமையே.

கொரில்லாக்களை அவை வாழக்கூடிய இயற்கையான சூழலிலேயே ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற ஆராய்ச்சி (
Field study) சிந்தனை முதன் முதலாக 1960 ஆண்டு வாக்கில்தான் தோன்றியது. முதன் முதலாக கொரில்லாக்களை பற்றிய ஆராய்ச்சியை விரிவான முறையில் மேற் கொணடவர் போஸே தயான் (Fossey Dian) என்ற பெண்மணி ஆவார். இந்த போஸே தயான் அமெரிக்காவைச் சேர்ந்த விலங்கியல் வல்லுனர் ஆவார். இவர் கொரிலாக்களைப் பற்றிய ஆய்விற்காக தன் வாழ்வின் பெரும் பகுதியை அர்பணித்தவர். இதற்கென காங்கோ மற்றும் ருவாண்டாவின் மலைக் காடுகளில் தன் பாதச் சுவடுகளை பதித்து கொரில்லாக்களைப் பற்றிய பல தகவல்களை வெளிக்கொண்டு வந்தவர். இவர் மூலமாகத்தான் கொரில்லாக்களைப் பற்றிய நிறைய தகவல்கள் தெரிய வந்தன. 1967 முதல் 1985 ஆண்டு வரை காட்டில் அமைந்த தன் ஆராய்ச்சி கூடத்தில் மர்மமான முறையில் கொல்லப்படும் காலம் வரை இந்த ஆராய்ச்சியில் மிக ஈடுபாட்டுடன் ஆய்வுகள் மேற்கொண்டார். இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலக அளவில் கொரில்லாக்களைப் பற்றிய ஒரு நல்ல தெளிவைக் கொடுத்துள்ளது. அவருக்கு பிறகும் இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

கொரில்லாக்கள் பிரிமேட் என வகைப்படுத்தப்பட்ட உயிரினங்களில் மிக அதிக அளவு எடையுடைய உயிரினமாகும். கொரில்லாக்களும் சிம்பன்சியும் மற்ற எல்லா விலங்குகளைக் காட்டிலும் மனிதனை ஒத்த உருவ அமைப்பையும் மற்றும் சில பண்புகளையும் பெற்று விளங்குகின்றன. அவற்றின் உடல் அமைப்பு அவற்றின் இனப் பெருக்க முறை மற்றும் அவை குட்டியை பராமரிக்கும் முறை அவற்றின் கை மற்றும் கால் அமைப்பு ஆகியவற்றை மனிதனுக்கும் இவைகளுக்கும் இடையேயான ஒற்றுமையாகச் சொல்லலாம். இருப்பினும் இவற்றைக் கொண்டு மனிதன் பரிணாமம் பெற்றான் என்ற முடிவுக்கு அதற்குள் எட்டிவிடாதீர்கள். உருவத் தோற்றத்தில் ஒத்து இருக்கின்றன என்பதோடு உங்கள் சிந்தனை செல்வதைச் சற்றே மடை போடுங்கள்.



குடும்பத் தலைவருடன் குடும்ப உறுப்பினர்கள்.


கொரில்லாக்கள் மிக அடர்ந்த தாவர வகைகள் நிறைந்த மலைப் பகுதிகளில் ஒரு சமுதாயமாக இணைந்து வாழக்கூடிய அக்மார்க் காட்டுவாசியாகும். நிலையான குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட இவற்றின் ஒரு குழுவில் சில எண்ணிக்கையிலிருந்து 50 வரையிலான எண்ணிக்கை வரை கூட ஒரு கூட்டுக் குடும்ப அமைப்பில் இணைந்து வாழக்கூடியவை. இருப்பினும் பொதுவாக ஒரு குழுவில் ஒன்று முதல் இரண்டு ஆண் கொரில்லாக்களும்
(Silver back) நான்கு முதல் ஐந்து பெண் கொரில்லாக்களும் மற்றும் அவற்றின் குட்டிகளும் (infant) சேர்ந்தவை ஒரு குடும்பமாக இருக்கும். ஒரு குழவில் மூத்த வகையுடைய ஆண் கொரில்லா குழுவின் தலைமையை வகிக்கும். அது இறப்பெய்யும் வரை எந்த போட்டியோ தேர்தலோ இன்றி தானே ராஜா தானே மந்திரிதான்.

ஆண் கொரில்லாக்கள் பருவ வயதை அடையும் போது அவற்றின் பின்புற முடி சற்றே வெள்ளையாக நிறமாற்றம் அடையும் இந்தத் தருணத்தில் தான் இவை உடல் ரீதியாக இனப்பெருக்கத்திற்கு தகுதியடைகின்றன. இதன் பிறகு இந்த காட்டு மைனர் ஒரு ஜோடியை கவர்ந்து தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொள்கின்றான். மேலும் இந்த நாயகனால் கவரப்பட்ட மற்ற குடும்பத்தைச் சேர்ந்த நாயகிகளும் சில இணைந்து விடுவதுண்டு. இதை சில்வர் பேக் (
silver back) என்ற காரணப்பெயரோடு குறிப்பிடுகின்றார்கள். அதே குடும்ப சந்ததியில் வயசுக்கு வராத மற்ற ஆண் கொரில்லாக்கள் பிளாக் பேக் (black back) என்று அழைக்கப்படுகின்றன. ஆண் கொரில்லாக்கள் பெண் கொரில்லாக்களை விட இரு மடங்கு எடையுடையதாகும். நாலைந்து மனைவியை வைத்துக் காலம் தள்ள வேண்டும் என்று சொன்னால் சும்மாவா? தேவையான போது தன் இஷ்ட நாயகியுடன் சல்லாபத்தில் ஈடுபட்டு தன் தேவையை நிறைவேற்றிக் கொள்கின்றன. சக்களத்தி சண்டை உண்டா? என்ற விபரம் கிடைக்கவில்லை.


ஆண் கொரில்லாக்கள் 180 கிலோ எடையும், 1.75 மீட்டர் உயரமும் (சராசரி மனிதனின் உயரம்), பெண் கொரில்லாக்கள் 90 கிலோ எடையுடன் 1.5 மீட்டர் உயரமும், குட்டி பிறக்கும் போது 2 கிலோ எடை வரை இருக்கும். கொரில்லாக்களின் வாழ் நாள் அதிக பட்சமாக 45 வருடங்களாகும்.

 

 

பயப்படாதே கண்ணே நீ விழுந்தால் என் உடலில் மட்டும் அல்ல. என் உள்ளமும் காயப்படும்.


கொரில்லாக்கள் குரங்கு இனத்தைச் சேர்ந்ததாக இருப்பினும் அவை பிரதான தரை வாழ் விலங்கினமாகும். இருப்பினும் அவற்றினால் மரங்கள் ஏறவும், பழ வகைகளைப் பறித்து உண்ணவும், கிளை விட்டு கிளை தொற்றித் தாவி பாய்ந்து செல்லவும் மற்ற வகையான குரங்கு சேட்டைகள் புரியவும் திறன் பெற்றவையாகும். ஆண் கொரில்லாக்களை விட பெண் கொரில்லாக்கள் மற்றும் குட்டிகள் அதிகம் மரங்களில் ஏறக்கூடியதாய் இருக்கின்றன. ஏனெனில் பெரும்பாலான தாவர வகைகள் ஆண் கொரில்லாக்களின் அதிகப்படியான எடையைத் தாங்கக் கூடியதாக இல்லாமல் இருப்பதே இதற்குக் காரணம் ஆகும். இவற்றின் தோலின் நிறம் கருமையாகும். இவற்றின் உள்ளங்கை மற்றும் கால் பாதத்தில் அறவே முடிகளற்றும் முகம் மற்றும் மார்பில் சிறிதளவிற்கு முடியும் இதைத் தவிர்த்து மற்ற உடலின் மற்ற பகுதியில் அடர்ந்த முடிகளையுடையதாயிருக்கும். இவைகளின் பரந்த உறுதியான மார்பு இவற்றின் பராக்கிரமத்திற்குச் சான்று பகரக்கூடியவை. இவற்றின் கை மற்றும் கால் அமைப்பு மனிதனை ஒத்திருப்பினும் இவை கை மற்றும் கால்கள் நான்கின் மூலம் நடந்து செல்லக் கூடியவையாகும். இவற்றின் கை அதன் கால்களைக் காட்டிலும் 20 சதவிகிதம் வரை நீளமாகும். இவற்றின் கைகள் கால்களின் நீளத்தை விட அதிகமாக இருப்பதனால் உடலின் பெரும்பகுதி எடையை இவற்றின் கைகள் தாங்கிக் கொள்கின்றன. கொரில்லாக்கள் பொதுவாக தண்ணீரை விரும்புவதில்லை. அவை உண்ணக்கூடிய இலை தழைகளின் நீர் சத்து பெருமளவில் இவற்றின் தண்ணீர் தேவையைப் பூர்த்தியாக்கி விடுகின்றன. கொரில்லாக்கள் மற்ற வகை வாலில்லாத குரங்குகள் போன்றல்லாது சுத்தமான சைவப் பிராணியாகும்.


தேடிச் சோறு நிதம் தின்று, சின்னஞ் சிறு கதைகள் பேசி, மனம் வாடி மிக உழன்று என்ற பாரதியின் கவிதையைப் போல கொரில்லாக்கள் தங்கள் வாழ்நாளின் பாதிக்கு மேற்பட்ட நேரத்தை உண்டு கழிப்பதிலேயே செலவிடுகின்றன. இவற்றின் பிரதான உணவு இலை, தண்டு, பூ, பழம், விதை, வேர் மற்றும் கிழங்கு போன்றவையாகும். இவை தங்கள் உணவிற்காக ஒரு நாளைக்கு சில நூறு மீட்டர்கள் முதல் ஒரு மைல் தூரம் வரை பயணிக்கக் கூடியதாகும். கொரில்லாக்கள் மற்ற வகைகளைப் போன்றல்லாமல் நடத்தல், விளையாடுதல், ஓய்வெடுத்தல் போன்ற குண இயல்புகளைக் கொண்டுள்ளன. எந்த இடத்தில் இருக்கும்போது சூரியன் அஸ்தமனத்தை அடைகின்றதோ அதே இடத்திலேயே இந்த நாடோடிக் கொரில்லாக்கள் தங்கள் குழுவுடன் தங்கிக் கொள்கின்றன. கொரில்லாக்கள் ஒவ்வொரு தினமும் இரவில் புதிய தங்கும் கூட்டை அமைத்துக் கொள்கின்றன. இவற்றின் கூடு வளைந்து கொடுக்கக் கூடிய மரக் குச்சிகள், இலை மற்றும் புற்பூண்டுகளைக் கொண்டு தரையிலோ அல்லது மரத்திலோ அமைத்துக் கொள்கின்றன. பொதுவாக ஆண் கொரில்லாக்கள் மரத்தினடியிலும் பெண் கொரில்லாக்கள் மற்றும் குட்டிகளும் மரத்தின் மேலும் இரவில் உறங்குகின்றன. இவற்றின் ஒரு குழு 5 முதல் 30 கிலோ மீட்டர் வரையான பரப்பளவை தங்கள் இராஜியத்தின் ஏகபோக எல்லையாகக் கொண்டு உணவு தேவைக்காகவும் தூங்க, நடக்க போன்றவைக்காகவும் பயன்படுத்திக் கொள்கின்றன. மனிதர்களைத் தவிர்த்து மற்ற குறிப்பிட்டுச் சொல்லும் படியான எதிரிகள் இல்லை என்று சொல்லலாம். மிகச் சொற்பமான சில இடங்களில் சிறுத்தைகளினால் இவை தாக்கப்படுகின்றன. அதையல்லாது மற்ற எதிரிகள் என்று சொல்லும் படியாக எதுவும் இல்லை.

 


பயந்துவிடாதீர்கள்! வெறும் பாவ்லாதான்!!

 

கொரில்லாக்கள் பொதுவாக சண்டைச் சச்சரவுக்களில் அதிகம் நாட்டம் செலுத்துவதில்லை. நமக்குள் எதுக்கு சண்டை பேசாமல் நீ உன் வேலையைப் பார்! நான் என் வேலையைப் பார்க்கின்றேன்! என்பது போல் உடல் ரீதியாக காயங்களை ஏற்படுத்திக்கொள்ளக் கூடிய அளவிளான சண்டையை பெரும்பாலும் தவிர்த்துக் கொள்கின்றன. ஒரு குழுவைச் சேர்ந்தவை அதன் தலைமைக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்கின்றன. அதே சமயம் தலைமையை வகிக்கக் கூடிய ஆண் கொரில்லாக்கள் தலைமைக் கேற்ற பண்புடன் இவைகளுக்கு ஏதேனும் ஆபத்து என்ற நிலை ஏற்படும் போது தங்கள் குடும்பத்தைச் சூழ்ந்து கேடயமாக பாதுகாப்பதில் எந்த குறையும் வைப்பதில்லை. மேலும் மற்ற குடும்ப ஆண் கொரில்லாக்களும் பாதுகாப்பில் பின் வாங்குவதில்லை. கொரில்லாக்கள் ஆபத்தான நேரங்களில் தங்களை மார்பை இரு கரங்களினாலும் ஓங்கி ஓங்கி அடித்துக் கொள்கின்றன.


குடும்பத்தைக் கட்டிக் கொண்டு மார் அடிக்கும் பொழப்பாய் போச்சே என்ற சலித்துக் கொண்டு மாரடிக்கக் கூடியவை இல்லை! இவை அடிப்பது, எதிரியை நேருக்கு நேர் அழைத்து அவற்றிற்கு பீதியை கொடுக்கும் மார் தட்டலாகும். மேலும் இவற்றின் பயத்தை உண்டாக்கும் கர்ஜனையும் அவை தங்கள் மார்பை அடித்துத் கொள்ளும் முறையும், வீரிட்டு கத்துவதன் மூலமும் இறுதியாக இவற்றின் வெளிபாடு மிகைத்து விடும்போது நிசப்தமான காடே அல்லோகலப் பட்டுவிடும் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அதை சகித்து கொள்ள முடியாமலோ அல்லது பயந்தோ அவற்றை நெருங்கக் கூடிய எதிரி ஆழம் தெரியாமல் காலை விட்ட கதையாக புறமுதுகிட்டு பீதியினால் ஓட்டம் பிடிக்கின்றது. இருப்பினும் இவற்றை சுற்றுலா பயணிகள் எந்த விதமான இடையூரும் இன்றி அன்புடன் உணவு பொருட்களுடன் நெருங்கும் போது அவை அவற்றை மிக அன்புடன் ஏற்றுக் கொள்கின்றன.


கொரில்லாக்கள் தங்களுக்கிடையே 15 வகையான வித்தியாசமான ஒலியை எழுப்புவதன் மூலம் மற்றவற்றுடன் தகவல் பரிவர்த்தனையில் ஈடுபடுகின்றன. விலங்குகள் தங்களுக்குள் ஏதோ விதத்தில் பேசி மற்றவற்றிற்கு தகவல்களை தெரிவிக்கின்றன என்பது அறிவியல் ரீதியாக நிரூபனம் செய்யப்பட்டுள்ளது. இவையும் வித்தியாசமான ஒலியை எழுப்புவதன் மூலம் தகவல் பரிமாற்றம் செய்துக் கொள்கின்றன. கொரில்லாக்கள் சைகை மொழியை மிக விரைவில் அறிந்துக் கொள்ளும் திறன் பெற்று விளங்குகின்றன. கோகோ (
koko) என்ற கொரில்லாவிற்கு நன்கு பயிற்சி அளித்ததன் மூலம் 500க்கு மேற்பட்ட சைகைகளை புரிந்துக் கொள்ளும் திறன் இருப்பதாக அறிய வந்துள்ளது. சில கொரில்லாக்களுக்கு முன்பாக கண்ணாடியை வைத்து சோதித்த போது பிரதிபலிப்பது தங்கள் உருவம்தான் என்பதை தெரிந்துக் கொள்ளுகின்றன. இதன் மூலம் இவற்றிற்கு சுயமான சிந்திக்கும் திறன் சிறிது இருப்பது விளங்கிக் கொள்ள முடிந்தது.

 


அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்


மனிதர்களைப் போன்றே இவற்றிற்கும் இனப்பெருக்கத்திற்கென்று குறிப்பிட்ட ஒரு கால வரையரைக் கிடையாது. வருடத்தின் எந்த நாட்களில் இவை உறவுக் கொள்கின்றன. பெண் கொரில்லாக்களின் மாத விலக்கு சுழற்சி மனித இனத்தைப் போன்றே 28 நாட்களாகும். தன்னுடைய 9 வயதில் பெண் கொரில்லாக்கள் பருவத்தை எட்டி இனப் பெருக்கத்திற்கு தகுதியடைகின்றன. இவற்றின் கர்ப காலம் 8.5 முதல் 9 மாதம் வரையான கால அளவாகும். தன் வாழ்நாளில் 3 முதல் 6 முறை நான்கு வருட இடைவெளியில் குட்டிப் போடுகின்றன. குட்டிகள் பெற்றெடுக்காத மலட்டு கொரில்லாக்களை விட மக்களைப் பெற்ற மகராசிகளுக்கு இவைகளிடையே நல்ல மதிப்பு உண்டு. கொரில்லாக்களின் குட்டிகள் மனிதக் குட்டிகளை விட இருமடங்கு விரைவாக தங்கள் பாரம்பரிய குணாதிசியங்களை அடைகின்றன. மனிதக் குட்டி எழுந்து நிற்கவே வருடத்தை எடுத்துக் கொள்கின்றது. இவற்றின் குட்டிகளோ தங்கள் வழிமுறைகளை விரைவில் கற்றுத் தேர்ச்சியடைகின்றன. பிறந்த குட்டிகள் 4 முதல் 5 ஆண்டுகள் வரை தன் தாயை சார்ந்தே வாழுகின்றன. பால் குடித்தும் மழை மற்றும் குளிரிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள தாயின் மடியில் தஞ்சம் அடைந்தும் இரவில் தாயின் கூட்டில் அதனுடன் தூங்கியும் காலம் கழிக்கும். தன் தாய் பயணிக்கும் போது அதன் முதுகில் சவாரி செய்த வண்ணம் பயணம் செய்யும். பொதுவாக பெண் கொரில்லாக்கள் பருவமடைந்த பின் பிறந்த வீட்டை விடுத்து புதிய வீட்டில் புகுந்து கொள்கின்றது. அதாவது வேறு குழுவில் சென்று இணைந்து கொள்கின்றது. அல்லது எலி வளையானலும் தனி வளை வேண்டும் என்று நினைக்கின்றனவோ என்னவோ? தெரியவில்லை!


மைனர் ஆண் கொரில்லாக்களுடன் இணைந்து புதிய குடும்பத்தை உருவாக்கிக் கொள்கின்றன. ஆண் கொரில்லாக்கள் பருவமடைந்தவுடன் "என் வழி தனி வழி" என்ற கணக்கில் புதிய காதலியை தேடி வீடு துறந்து காடே கதியாக வேறுக் குடும்பத்தை சேர்ந்த பெண் கொரில்லாக்கள் பின்னால் லோ-லோ என்று அலைய ஆரம்பித்து விடுகின்றது. அல்லது எங்கு காதல் தேடி அலைவது என்ற சோம்பலில் தன் குடும்பத்தில் இருக்கும் பெண் கொரில்லாவை தள்ளிக் கொண்டு செல்லும் முயற்சியிலும் இறங்குவதுண்டு. உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யும் இத்தகைய சந்தர்ப்பங்களில் இவற்றிற்கு உடம்பில் டின் கட்டும் நிகழ்ச்சிகளுக்கும் அங்கே குறைவு இல்லை. இத்தகைய இந்த சந்தர்ப்பங்களில் இவைகளுக்கிடையே சண்டைகள் நிகழுவதுண்டு. மேலும் சில சமயம் குட்டிகளைக் கொன்றுவிட்டு அதன் தாயை கடத்தி கொண்டு செல்லும் அகராதிப் போக்கிற்கும் அங்கே குறைவில்லை.


காமத்திற்கு அல்லது காதலுக்கு முன்பு எதுவும் துச்சம் என்ற இந்த செயல்போக்கு மனித இனங்களில் அடிக்கடி காதில் விழும் செய்திதானே. எந்த நேரத்தில் அவைகள் குடும்பத்தை விட்டு ஓட இரகசியம் பேசிக் கொள்கின்றன என்பது அவற்றிற்குதான் வெளிச்சம். அரிதாகப் பருவமடைந்த ஆண் கொரில்லாக்கள் தங்கள் குடும்பத்துடனே தங்கிக் கொள்கின்றன. தன் தந்தை இறந்தவுடன் அல்லது வயது முதிர்ந்தவுடன் தந்தை வழி தனயன் வழி எனபது போல் அந்த குடும்பத்திற்கு தலைமைக்கு வருகின்றது. இவை 35 வருடங்கள் முதல் 45 வருடங்கள் வரை உயிர் வாழக் கூடியனவாக இருப்பினும் 25 சதவிகிதம் குட்டிகள் பிறந்த இரண்டு வருடங்களில் நோய்களினால் இறந்து விடுகின்றன. இவற்றிற்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப் போவது யாரோ?

'ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்று
பையல் என்ற போது பரிந்தெடுத்து செய்யவிருக் கைப்புறத்திலேயேந்திக்
கனக முலை தந்தாளை..


என்ற பட்டினத்தாரின் வரிகள் இவற்றிற்கு பொருந்தாமல் போய்விடுமா என்ன? அந்த அரவணைப்பைப் பாருங்கள். அதன் முகத்தில் அன்பினைப் பாருங்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்கும் என்ற குறளைப் போல் இறைவன் உயிர்களிடத்தில் வைத்த உணர்ச்சி மயமான அன்பு என்னும் பண்பை எங்ஙனம் வார்த்தைகளினால் விளக்குவது. முற்றிலும் சுய சக்தியற்ற தன் சந்ததியை காக்கும் உணர்ச்சி பூர்வமான அந்த பரோபகார சிந்தனையை இவை எங்கிருந்து பரிணாமம் பெற்றன. உதாரணத்திற்கு எல்லா உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்று பரிணாமம் பெற்றன என்று வைத்துக் கொண்டாலும் உடல் ரீதியான மாற்றம் ஏற்படலாமே தவிர இந்த உணர்ச்சி பூர்வமான பண்புகளை எவ்வாறு அவைகள் பெற்றிருக்க இயலும். ஏதோ சில விஷயங்களில் காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாய் ஒரு ஒழுங்குடன் அமையலாம். ஆனால் எல்லா விஷயங்களிலுமா அவ்வாறு நிகழ முடியும்?. சாத்தியமே இல்லை! இல்லவே இல்லை!


இந்த உலகில் படைப்பினங்கள் மற்றும் உலகத்தின் ஒழுங்குபாடு எல்லா விஷயங்களும் எவ்வாறு ஒரு ஒழுங்குடனும் எந்த ஒரு முரண்பாடின்றியும் அமைய முடியும். இந்த பரிணாமத் தத்துவம் இந்த அளவிற்கு ஒரு மாயை ஏற்படுத்தியதற்கு காரணம் டார்வினை எதிர்த்த கிருஸ்துவ உலகம் அதற்கு ஒரு சரியான பதில் அளிக்காமையே ஆகும். எதிலும் பகுத்துதான் அறிவோம் என்று சொல்லும் டார்வின் வாதிகளுக்கு பதில் அளிக்க ஆயத்தம் ஆகிவிட்டனர் அறிவியல் அறிஞர்கள்.

 

இந்த நூற்றாண்டில் அறிவியல் உலகினை பிரமிப்பின் எல்லைக்கே இட்டுச் செல்லும், இட்டுச் செல்வதென்ன உதைத்தே துரத்தும் ஒரு துறை இருக்கிறது என்று சொன்னால் அது குரோமோசோம்களில் அடங்கியிருக்கும் ஜீன்களைப் பற்றித் மனிதனின் மரபியல் துறையாகும். மனித உடலின் 23 ஜோடி குரோமோசோம்களில் காணப்படும் இவைகள் மனிதப் படைப்பின் மூலமாக இறைவனால் படைக்கப்பட்டதாகும். இந்த சிறிய மரபியல் மூலக்கூறுகளுக்கென்று ஒரு துறை உருவாக்கப்பட்டு (Genetic Engineering) விரிவான முறையில் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. இந்தத் துறையில் இதுவரை விஞ்ஞானிகளினால் கண்டறியப்பட்ட சொற்பமான தகவல்கள் இவர்களின் கொள்கைக்கு ஆதரவளிக்கக் கூடியதாய் அமையவில்லை. மரபியல் மூலக்கூறுகளான அடினைன், குவானைன், தைமின் மற்றும் சைட்டோசின் ஆகிய இவைகள் அர்த்தமுள்ள வரிசையில் அமைந்திருக்கும் பாங்கு அறிவியலார்களை அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளது.


இவற்றில் கிட்டதட்ட 5000 கோடி தகவல்கள் பதியப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளார்கள். இந்த ஜீன்களை மனித உடலைக் உருவாக்கும் பொறியிலாருக்கு ஒப்பாக கொள்ளலாம். இவையே ஒரு மனிதனின் உறுப்புகள், நிறம், உயரம், ஆரோக்கியம், மரபியல் பண்பு ஆகியவற்றை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணியாகும். இவற்றில் ஏதேனும் தவறுகள் ஏற்படின் பிறக்கும் பிறப்பு மனித இனமா என்பதே சந்தேகத்தை ஏற்படுத்திவிடும். இந்தத் துறை ஆராய்ச்சி மனித இனத்தின் மூலம் ஒரு ஆத்மாதான் என்ற முடிவை எட்டிவிட்டது.

மனிதன் குரங்கிலிருந்துதான் பரிணாம வளர்சி அடைந்தான் என்ற கூற்றை டார்வின் வைத்ததற்கு முக்கியக் காரணமாக அமைந்தது குரங்குகளின் தோற்றம் மற்றும் அதன் சில செயல்பாடுகள் மனிதனைப் போன்றே இருப்பதுதான் முக்கியமான காரணம் ஆகும். ஆனால் சமீப கால ஆராய்ச்சியின் முடிவுகள் மற்ற உயிரினத்தின் இரத்தத்தை மனித உடலுக்கு ஏற்ற இரத்தமாக மாற்றக் கூடிய சாத்தியம் இருக்கிறதென்றுச் சொன்னால் அது பன்றியின் இரத்தம்தான் என்று விஞ்ஞானிகள் அடித்துச் சொல்கின்றார்கள். ஆம் மனித இரத்தத்தோடு நெருங்கிய ஒற்றுமை உடையது பன்றியின் இரத்தமாகும். மேலும் பன்றியின் இதய அமைப்பு மனித இதயத்தை பெருமளவிற்கு ஒத்திருக்கின்றன. எனவே மனிதன் பரிணாமம் அடைந்தான் என்று வைத்துக்கொண்டால் மிக நெருக்கமாக வருவது பன்றிதான் என்று அறிவியலார் சொல்கின்றார்கள். இப்பொழுது சப்தநாடியும் அடங்கிய இவர்கள் என்னச் சொல்லப்போகின்றார்கள். மனித குலத்தின் மூலம் ஒன்றுதான் என்று ஏற்றுக்கொள்ளும் போது அதை படைத்த இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை ஏற்கும் நிலை ஏற்படும் என்பதல்லாமல் இவர்கள் மறுப்பதற்கு வேறு என்ன காரணம் இருக்கின்றது. ஆரோக்கியமான ஒரு மனிதனின் உடலில் 30 டிரில்லியன் (1000 பில்லியன்ஸ் = ஒரு டிரில்லியன்) செல்கள் இருப்பதாக கணக்கிட்டுள்ளார்கள். இதில் ஒவ்வொரு செல்களுக்கும் இரத்தத்தின் மூலம் ஆக்ஸிஜன் மூலக்கூறு மற்றும் உணவுச்சத்துகள் எந்த விதமான குறைவுமின்றி வினியோகம் செய்யப்படுகின்றன.


ஆனால் இன்று உலகின் 600 கோடி மக்களுக்கும் ஒரே சீராக பட்டினியின்றி மனிதர்களினால் உணவளிக்கப்படுகின்றதா? ஒரு பக்கம் ஆஸ்திரேலியாவில் பாலை கடலில் கொட்டுகின்றார்கள். அமெரிக்காவில் கோதுமையை கடலில் கொட்டுகின்றார்கள். ஐரோப்பாவில் உணவு உற்பத்தி அதிகமாகி நிலத்தை உழாமல் தரிசாக போட்டு வைக்க மானியம் வழங்கப்படுகின்றது. மறுபுறம் நிகழும் பட்டினிச் சாவுகளை எதிர் நோக்கி சோமாலியா, எத்தியோப்பியா, எரித்ரியா, ருவாண்டா, உகாண்டா போன்ற ஆப்ரிக்க நாடுகள். பசிக்கு மாங்கொட்டையை அரைத்து தின்று உயிர் விடும் மலைவாழ் இந்தியர்கள் ஒருபுறம் என்று பட்டியல் நீண்டுக் கொண்டே செல்லும். மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இத்தகைய விஷயங்களில் இவனால் ஒரு தீர்வைக் காண முடியவில்லை. சீரான வினியோகம் என்பது இதுவரை இவனைக் கொண்டு சாத்தியமற்றதாய் இருக்கின்றது. ஆனால் இறைவன் படைத்த நம் உள் உறுப்புகளில் எந்தத் தங்கு தடையுமின்றி எந்த முரண்பாடுமின்றி வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. உங்களுக்குள்ளேயே நிறைய அத்தாட்சிகள் இருக்கின்றது என்ற நித்திய ஜீவனாகிய நம் இறைவனின் வல்லமையை மனிதன் சிந்தனைச் செய்தாலே இறைவனின் அற்புதங்களை கணக்கின்றிக் காண முடியும்.

அறிவியலைப் பற்றி சிறிதளவே அறிந்தவன் இறைநம்பிக்கை இல்லாதவனாகிறான். ஆனால் அறிவியலைப் பற்றிய ஆழ்ந்த அறிவுள்ளவனோ, இறை நம்பிக்கையில் மிகுந்த ஈடுபாடு கொள்கிறான். என்ற ஒரு அறிஞனின் கூற்று இந்த இடத்தில் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை.


உங்கள் அனைவரின் மீளுதலும் அவனிடமே உள்ளது. (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்காகும். அவனே உங்களை ஆரம்பத்தில் படைத்தான். பின்னர் நம்பிக்கைக் கொண்டு நல்லறங்கள் செய்தவர்களுக்கு கூலியை நியாயமாக வழங்குவதற்காக மீண்டும் படைக்கின்றான். (ஏக இறைவனை) மறுப்போறுக்கு அவர்கள் மறுத்துக் கொண்டிருந்தால் கொதிக்கும் பானமும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. (அல்குர்ஆன் 10:04)

 


 
மன அழுத்தம். PDF Print E-mail
Thursday, 16 April 2009 13:52
நமது வாழ்வில் நிரந்தரமாக இருக்கக்கூடியவை என்று சொன்னால், அதில் மன அழுத்தம் கண்டிப்பாக இருக்கின்ற ஒன்றாகும். அவை பற்றி பேசுவதற்குக் கூட இன்று நம்மில் பலரும் தயாராக இல்லை. ஏனென்றால், அவை நம் வாழ்க்கையினுடைய ஒரு பகுதியாக தான் கருதுகிறார்கள். இது சரியும் கூட.
ஆனால், மன அழுத்தத்தால் ஏற்படுகின்ற இடையூறுகளை புரிந்துகொண்டால் மட்டுமே, இதனை விலக்கி வைப்பதற்கான தேவையை நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.

பொதுவாக மன அழுத்தம் இரண்டு வகையில் உள்ளன.
1. உங்களுக்கு சுயமாக தெரியக் கூடிய மன அழுத்தம்.
2. வெளிப்படையாக தெரிந்துகொள்ள முடியாத மன அழுத்தம்.
ஆனால், சுயமாக தெரியக் கூடிய மன அழுத்தத்தை நம்மால் ஓரளவு விலக்கிக் கொள்ள முடியும்.

மன அழுத்தத்தால் ஏற்படும் இடையூறுகள்

மன அழுத்தத்தால் நம் மனதுக்கும் உடலுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. முதுகு வலி, அதிகமாக பசி எடுப்பது, அதிமான தலைவலி போன்றவை மன அழுத்தத்தாலும் ஏற்படுவதுண்டு.
ஆண்களும் பெண்களும் பெரும்பாலும் முதுகுவலியால் அவதிப்படுகிறார்கள். இப்பிரச்சனை இல்லாமல் இருப்போர் மிகச் சொற்பம்தான். ஆனால் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்றால், இந்த முதுகுவலிக்கு முக்கியக் காரணமாக இருப்பது, 'டென்ஷன்' தான் என்பது! இதைப் போலவே மற்றொரு பிரச்சனைதான் அதிகமாக பசி எடுப்பதும்!

அளவுக்கு அதிகமாக உணவை உட்கொள்வது பலருடைய வழக்கமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். அப்படிப்பட்டவர்கள் நிரந்தரமான மன அழுத்தத்துக்கு ஆளாகி உள்ளனர் என்று தெரிந்துகொள்ளலாம்.

மன அழுத்தம் மன ரீதியான ஒன்றுதான் என நம்புவதால், இதற்கு உடம்பு வலி ஏற்படுத்த முடியாது என்று முடிவு செய்துகொள்வது தவறு. உங்களுக்கு ஏற்படுகின்ற பல நோய்களுக்கும் காரணமாக இருப்பதில் ஒரு முக்கியப் பங்கு மன அழுத்தத்துக்கு உண்டு.

நகத்தைக் கடிப்பது, தலையைச் சொறிவது, எப்போதும் கைகளால் ஏதாவது செய்துகொண்டிருப்பது போன்றவை எல்லாம் பழக்கமாவது மன அழுத்தம் அதிகமாகும் தருணத்தில்தான்.

மன அழுத்தத்தை போக்குவதற்கான வழிமுறைகள்:

சில நேரங்களில் எதாவது ஒரு வேலையை செய்து கொண்டிருக்கும்போது, காரணமே இல்லாமல் கடுமையான மன அழுத்தம் ஏற்படலாம். சீக்கிரமாக செய்து முடிக்க வேண்டிய வேலைகளாக இருந்தால், அதில் முழுமையாக கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இந்த நேரங்களில் ஒரு ரப்பர் பேண்டால் கைகளைக் கட்டிக் கொள்ளJustify Fullலாம்.

பேப்பரைத் துண்டு துண்டாகக் கிழித்துப் போடுவதால் சிலருக்காவது மன அழுத்தத்தை குறைத்துக்கொள்ள உதவியாக இருக்கின்றது. பேப்பரைக் கிழிக்கும்போது கேட்கின்ற சத்தமும், கிழித்து முடித்தவுடன் ஏற்படுகின்ற உணர்வும், அதாவது நாம் எதையோ செய்துவிட்டோம் என்று தோன்றுவது. இது நல்லதுதான். இது மன அழுத்தத்துக்கு தீர்வாக இருக்கிறது.

ஒரே விஷயம்தான் உங்களை மீண்டும் டென்ஷன் ஆக்குகிறது என்றால், கண்களைக் கொண்டு தீர்வு காணலாம் என்றும் மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். எந்த விஷயம் உங்களை அலட்டுகின்றதோ, அந்த விஷயத்தை நன்றாக யோசித்த பிறகு, தலை அசைக்காமல், கண்ணின் மணிகளை இரு பக்கங்களிலும் வேகமாக அசைக்கவும். இதை இருபது தடவை செய்து பார்த்த பிறகு நமது நாடியைப் பிடித்துப் பார்த்தால், கண்டிப்பாக மன அழுத்தம் குறைந்திருப்பதை உணரலாம். இது பலருக்கும் உதவியாக இருக்கின்றது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதிக அளவில் உணவை உட்கொள்பவர்கள், சாப்பிட்ட பிறகு 15 நிமிடம் தூங்குவது நல்லது. இதனால் புத்துணர்வு அதிகமாவதற்கும், மன அழுத்தம் குறைவதற்கும் வழிவகுக்கலாம்!

Abu Sumayyah.....
Jeddah
 
<< Start < Prev 1 2 Next > End >>

Page 1 of 2
Banner

Archive

JoomlaWatch Stats 1.2.8b_12-dev by Matej Koval

User Online

No users online

Advertise here...Contact webmaster for more details